24 - திரைவிமர்சனம்

Reviews May 6, 2016

தமிழை விடுங்கள், ஹாலிவுட் படங்களோடு ஒப்பிடும் வகையில் மிக அரிதாக ‘காலப்பயணம்’ எனும் கான்செப்ட்டை வெறும் ஓரிரண்டு காட்சியில் ஊறுகாயாக பயன்படுத்தாமல், ஒவ்வொரு காட்சியின் தொடுப்புக்களிலும் இழைத்து இழைத்து முன்னும் பின்னும் அழகாக தொடுத்து நம்பமுடியாதபடி முழுமையானதொரு திரைக்கதையை தீட்டியிருக்கிறார்கள். படுசுவாரஸ்யமாக யோசிக்கவே விடாமல் பரபரவென ஓடும் திரைக்கதையிலும் வில்லன் சூர்யாவின் புத்திசாலித்தனத்திலும்தான் படத்தின் வெற்றி ஒளிந்திருக்கிறது.

படத்தில் ஐந்து நிமிஷத்துக்கொரு ட்விஸ்ட் வந்துகொண்டே இருக்கிறது. அதிலும் பலது யூகிக்கவே முடியாத டபுள் ட்ரிபிள் ட்விஸ்ட்டுக்கள். தமிழ் சினிமாவின் அரதப் பழைய டெக்னிக்கான, மறைந்திருந்து உண்மையை ஒட்டுக் கேட்டல் போன்ற இடங்களில் நாம் சலிப்படையும்போது, அதை திடீரென்று திருப்பிப்போட்டு அதற்குள்ளேயே இன்னொரு ட்விஸ்ட் வைத்து அதிரவைக்கிறார்கள். இன்னொன்று, முக்கியமான காட்சிகளில், முன்னால் வரும் சாதாரண காட்சி ஒன்றை முக்கிய திருப்புமுனையாக பயன்படுத்துவது ‘நல்ல’ படங்களில் வழக்கமான விஷயம். இதில் ஒரு படி மேலே போய், நாம் யூகிக்கவே முடியாதபடி சில சாதா காட்சிகளை பல்வேறு காட்சிகளில் விதவிதமாக தொடுத்திருக்கிறார்கள்.

த்ரில்லர் படங்கள் எடுபட வேண்டுமென்றால், வில்லன் ஹீரோவை விட எப்போதும் ஒரு படி முன்னால் இருக்கவேண்டும் என்பது விதி. தனி ஒருவன் அபிமன்யு போல, டார்க் நைட்டின் ஜோக்கரைப் போல, பல லெவல்களில் திட்டமிட்டு ஹீரோவை தற்காலிகமாக ஜெயிக்கவைத்து வீழ்த்தும் வில்லனின் புத்திசாலித்தனம் தான் இப்படத்திலும் உண்மையான ஹீரோ. உண்மையைச் சொன்னால், பெரிய ஸ்டார்களின் படங்களில், இப்படியான புத்திசாலி வில்லனை வைத்தால் ஸ்டார்களின் ரசிகவெறியர்கள் திருப்தியடையாமல் போக வாய்ப்பிருக்கிறது. அதற்காக ஹீரோவையே டபுள் ஆக்ஷனில் அதிபுத்திசாலி வில்லனாக நடிக்க வைப்பது தமிழில் அவ்வப்போது நடக்கும். அப்படியாக எந்திரன் ரஜினி, வாலி அஜித் வரிசையில் இப்போது 24 சூர்யா. ஆனால், அழகிய தமிழனுக்கு மட்டும் இந்த ட்ரென்ட் சரிவரவில்லை. வில்லனாக நடிப்பதற்கு, முதலில் அவருக்கு நடிக்க தெரிந்திருக்கவேண்டுமே??

காட்சியமைப்பிலும், நேரத்தை மாற்றும்போது கடிகாரங்கள் பின்னால் ஓடுவது, மழையை நிறுத்துவது எல்லாமே கவனத்தைக் கவர்கின்றன. ஸ்டேடியம் சீனில் இலங்கை ஜெயிக்கும்போது திரையங்கம் அதிர்கிறது. நேரத்தை நிறுத்திவிட்டு மலிங்காவின் பந்தைத் தட்டி விடும்போது, “அப்ப இந்தியா இந்த மேட்ச்ல கூட பித்தலாட்டம் பண்ணித்தான் ஜெயிச்சிருக்காங்க” என கமென்ட் அடித்துக்கொண்டிருந்தேன். :-D  வசனங்களில் ஒரே வசனத்தை திரும்பத் திரும்பச் சொல்வது பல இடங்களில் ரசிக்கவைத்தாலும் சில இடங்களில் போரடிக்கிறது. போகிறபோக்கில் வைக்கும் டபிள் ட்விஸ்ட்கள் சாதாரண மக்களுக்கும் புரியவேண்டும் என்பதற்காக வைக்கப்பட்ட வசனங்கள் தேவையில்லை என்பது என் கருத்து.

படத்தில் குறைகள் என்று யோசித்தால் ஏராளமாக இருக்கின்றன. சுருக்கமாக சொன்னால்: காதல், பாடல், சென்டிமெண்ட். தமிழ் ரசிகர்கள் வெளிநாட்டு டூயட் பாடல்கள், அம்மா செண்டிமெண்ட், லூசுப்பொண்ணு காதல் காட்சிகள் இதையெல்லாம் என்றைக்கோ தாண்டி வந்துவிட்டார்கள் என்பது சூது கவ்வும், நேரம், கககபோ, பீட்சா, இன்று நேற்று நாளையின் வெற்றிகளை பார்த்துமா புரியவில்லை? தடதடவென ஒரு அருமையான மெயின் ட்ராக் முழுவேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும்போது, நாம் சீட் நுனியில் உட்காரும் நேரத்தில் திடீரென ஒரு மொக்கை ரொமான்ஸ் காட்சியோ, அதைவிட மொக்கையான வெளிநாட்டு டூயட்டோ வந்து கடுப்பேற்றுகிறது. சமந்தா க்ளோஸ் அப்பில் சிரித்து கொஞ்சம் பயமுறுத்தினாலும், பொதுவாக பார்க்க மிக அழகாக இருக்கிறார். ஆனால், அவர் சம்பந்தப்பட்ட அத்தனை காட்சிகளையும் வெட்டிவிட்டால், படம் இன்னும் விறுவிறுப்பாக, முழுமையாக, குறைகளே இல்லாமல் வந்திருக்கும்.

திரைக்கதை சம்பந்தப்பட்ட குறைகள் என்றால், எக்கச்சக்கமான நம்பமுடியாத கோ-இன்சிடென்ட்கள். காகம்(? citation needed) இறகு போடுவதிலிருந்து, சிலிண்டர் வெடிப்பது, குப்பையிலிருந்து சாவி கிடைக்கும் சீக்வென்ஸ், மாமன் பொண்ணு.. என சொல்லிக்கொண்டே போகலாம். இருந்தும் அதையெல்லாம் யோசிக்கவிடாமல் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் ஆக வைத்து திரைக்கதை விறுவிறுவென ஓடுவதால், இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. லாஜிக் மிஸ்டேக் வரவே கூடாது என எக்கச்சக்க கவனம் எடுத்திருப்பது, "ரெண்டு வீட்டுக்கும் தனித்தனி வயரிங் குடுத்தது பெரிய தலைவலி” என்பது போன்ற சின்னச்சின்ன வசனங்களில் தெரிகிறது.

சுருக்கமாக, காதல், செண்டிமெண்ட், பாடல் காட்சிகளை வெட்டிவிட்டு கவனித்தால், ஒரு டைம் ட்ராவல் படத்தை இப்படித்தான் எடுக்கமுடியும், எடுக்கவேண்டும். ஹாலிவுட் படங்களுக்கே சவாலாக, அந்தளவு அருமையாக கதை எழுதி எடுத்திருக்கிறார்கள். இதையே ஷங்கர் எடுத்திருந்தால் நிச்சயம் மொக்கையாக முடிந்திருக்கும். விக்ரம் குமார் அசத்தியிருக்கிறார். வாழ்த்துக்கள்.

PS: இந்தப் படத்தின்மேல் எனக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. மாஸ், அஞ்சான், சிங்கம் 2, மாற்றான்களின் விளைவாக சூர்யா மேலே இருந்த நம்பிக்கை முழுக்கப் போய்விட்டது. சயின்ஸ் பிக்ஷன் என்றால் என்னவென்றே தெரியாத தமிழ் சினிமாவில், எப்படியும் இவ்விஷயத்தை சொதப்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கை மட்டும் பரிபூர்ணமாக இருந்தது. இயக்குனர் யாரென்றும் விசாரிக்கவில்லை. ஒரு விமர்சனம் கூட படிக்கவில்லை. Mukki திடீரென்று கூப்பிட, ஒரு உந்துதலில் ஓகே சொல்லிவிட்டேன். 400 ரூபா நிச்சயம் வேஸ்ட் என்று நினைத்தபடியே போனால், வழக்கம்போல நம்பிக்கையைக் கெடுத்துவிட்டார்கள், நம்பமுடியாத அளவுக்கு அருமையாக எடுத்துவிட்டார்கள். 400 க்கு மேலேயே கொடுக்கலாம்!!

First posted on Facebook: https://web.facebook.com/abarajithan11/posts/10208048532282592

Tags