மாட்டிறைச்சியும் இந்துமதமும்

Thoughts Jun 26, 2016
  • விவேகானந்தர் அமெரிக்காவில் தங்கியிருந்த போது மாட்டிறைச்சி தின்றார்.
  • இராமாயணத்தில், கொழுத்த கன்றை அடித்து உணவாக்கி இராமனுக்குப் பரத்வாஜ முனிவர் படையலாக்கினார்
  • விருந்தினர்களை வரவேற்கும் போது பசுக்களைக் கொன்று உணவாகப் படைப்பது பெருமைக்குரிய ஒன்று என வேதங்களும் அவற்றிற்குப் பிந்தைய கருத்துகளும் சொல்கின்றன

நிறைய நாளைக்குப்பிறகு ஒரு ultimate controversial post. மாடு சாப்பிட மாட்டேன் என்பதை ஒரு கண்மூடித்தனமான தனிமனித விருப்பமாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், அதற்கு இந்துமத நூல்களில் அடிப்படை கிடையாது என்பதே நேசமித்ரன் ஆதாரங்களுடன் எழுதிய இந்தப் பதிவின் சாராம்சம்.

Source: keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/19171-2012-03-26-11-51-29


விலங்குகளைப் பலியிடுதல் என்பது வேத காலத்தில் சாதாரணமான ஒன்றாக இருந்திருக்கிறது. பொதுப் பலியிடுதலுக்கு முன் செய்யப்படும் முன்னேற்பாட்டுச் சடங்காகிய ‘அக்கினித் தேயம்’ என்னும் சடங்கில் பசுதான் கொல்லப்பட்டது.


பலியிடுதலில் முதன்மையான ஒன்றாகிய ‘அசுவமேத யாகத்’தில் அறுநூறு விலங்குகளும் பறவைகளும் கொல்லப்படும்; அப்படிக் கொல்லப்பட்ட பின் பலியிடுதலின் நிறைவைக் குறிப்பிடும் வகையில் இருபத்தோரு பசுக்கள் கொல்லப்படும்.

‘இராஜசூய யாகம்’, ‘வாஜபேய யாகம்’ ஆகிய பலியிடுதல் நிகழ்வுகளைப் போல முதன்மையான ஒன்றாகக் கருதப்படும் ‘கொசவ யாகத்’தில் பசு மருட்டர்களுக்குப் பலியிடப்பட்டது. பசு மட்டுமன்று! கன்றுகள் போன்று எல்லா விலங்குகளும் பல யாகங்களில் பலியிடப்பட்டிருக்கின்றன.

வேதக் கருத்துகளிலும் தருமசாத்திரங்களிலும் நுகர்வுக்காகப் பசுக்கள் கொல்லப்பட்டதும் மாட்டிறைச்சி தின்னப்பட்டதும் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன. ‘பசு விருப்பமான உணவு’ என வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. யக்ஞ வல்கீய முனிவர், பசு இறைச்சியைத் தின்பதை வலியுறுத்துவது வேதங்களில் உள்ளது. விருந்தினர்களை வரவேற்கும் போது பசுக்களைக் கொன்று உணவாகப் படைப்பது பெருமைக்குரிய ஒன்று என வேதங்களும் அவற்றிற்குப் பிந்தைய கருத்துகளும் சொல்கின்றன. இறுதிச் சடங்குகளின் போது பிராமணர்கள் பசுக்களைக் கொன்று தின்றதற்கான பல்வேறு எழுத்துச் சான்றுகள் இருக்கின்றன. நான் சொல்வதெல்லாம் கிடைத்திருக்கும் சான்றுகளுள் சொற்பந் தான்! இவற்றைப் போல ஏராளமான எழுத்துச் சான்றுகளைக் காட்ட முடியும்.

ஆசாரம் மிகுந்த பிராமணர்கள் பசியைப் போக்குவதற்காக காளை இறைச்சியையும் நாய் இறைச்சியையும் தின்றதை மனுஸ்மிருதி கூறுகிறது. படித்த பார்ப்பன‌ரைப் பெரிய காளையைப் படைத்தோ ஆட்டைப் படையலாக்கியோ வரவேற்க வேண்டும் என்று யக்ஞவல்கீய ஸ்மிருதி (கி.மு. 100-300) சொல்கிறது. மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களுள் முக்கால்வாசிப் பேர் அசைவ உணவு தின்பவர்கள் தாம்! இரந்திதேவ அரசரின் அடுக்களையில் மட்டும் ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் பசுக்கள் அடித்துக் கொல்லப்பட்டு உணவாக்கப்பட்டன. மற்ற தானியங்களுடன் இந்த இறைச்சியும் பார்ப்பன‌ர்களுக்குக் கொடுக்கப்பட்டன.
கொழுத்த கன்றை அடித்து உணவாக்கி இராமனுக்குப் பரத்வாஜ முனிவர் படையலாக்கினார் என்று சொல்லப்படுகிறது. மதம் சார்ந்த எழுத்துகள் மட்டுமல்ல! மதச்சார்பற்ற இலக்கியங்களிலும் இப்படிச் சான்றுகள் காட்ட முடியும். இந்திய மருத்துவ முறைகளில் மாட்டிறைச்சி மருந்துக்காகப் பயன்படுத்தப்பட்டது. மாட்டிறைச்சியைத் தின்பது பற்றிக் காளிதாசர், பவபுத்தி, இராஜசேகரர், சிறீஹர்சர் ஆகியோருடைய எழுத்துகளில் இருக்கும் குறிப்புகள் நிறைய சொல்கின்றன.

வேதகாலப் பசுக்கள் புனிதமானவை என்று அறிஞர்கள் சிலர் சொல்லி வந்திருக்கிறார்கள். ‘அக்ஞா’ என்னும் சொல்லுக்குக் ‘கொல்லத்தகாதவை’ என்னும் பொருளை அதர்வண வேதம் கூறுகிறது. வேத காலப் பசு புனிதமானது என்பது எப்போது என்றால் அப்பசு பார்ப்பன‌ருக்குப் பலிக்குரிய தொகையாகக் (‘தட்சணையாக’க்) கொடுக்கப்படும் போது மட்டும் தான்! புத்தமும் சமணமும் விலங்கு வதையை எதிர்க்கின்றன. அவை கூடப் பசுவைப் ‘புனிதமான விலங்கு’ எனச் சொல்லவில்லை.

பசு புனிதமானது என்னும் கருத்தியல் பின்னர் வளர்த்தெடுக்கப்பட்ட ஒன்றுதான்! இந்தியச் சமூகம் நிலப்பிரபுத்துவ முறைக்கு மெல்ல மாறி வரும் சூழலில் ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தான், சட்டத்தை உருவாக்கியவர்கள் மாட்டிறைச்சி தின்பதை வரவேற்காமல் நிறுத்தத் தொடங்கினார்கள். கலியுகக் காலமாக இதிகாசங்களிலும் தொன்மங்களிலும் கூறப்படும் இக்காலத்தை ஒட்டித்தான் சமூக நடைமுறைகளும் சடங்குகளும் ஏராளமான மாற்றங்களைக் கண்டன. முன் நடந்துகொண்டிருந்த நடைமுறைகள் பலவற்றை ‘கலிவர்ஞா’ என்று கொண்டு வரப்பட்ட நடைமுறை மாற்றியது. அப்படித்தான் பசுவைக் கொல்வதும் தவறெனப் பார்ப்பன‌ எழுத்துகள் பதியத் தொடங்கின.

பசுக்களைக் கொல்வதும் அவற்றின் இறைச்சியைத் தின்பதும் தீண்டப்படாத சாதிகளிடம் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனால் தரும சாத்திர எழுத்துகள் இப்படித் தின்பதைச் சிறிய குற்றமாகக் கூடக் கூறவில்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் துறவி விவேகானந்தர் அமெரிக்காவில் தங்கியிருந்த போது மாட்டிறைச்சி தின்றார். மாட்டிறைச்சி தின்ன மாட்டோம் என்று கூறும் ஆசாரம் மிகுந்த இந்துக்கள் மருத்துவத்திற்காக மாட்டிறைச்சித் தேநீர் குடிப்பதைக் காந்தியடிகள் பலமுறை கேலி செய்திருக்கிறார்.

இன்றும் கேரளத்தில் எழுபத்திரண்டு சாதிகள் (இவற்றுள் எல்லாச் சாதிகளும் தீண்டப்படாத சாதிகள் அல்ல) ஆட்டிறைச்சியின் விலை அதிகம் என்பதால் மாட்டிறைச்சியைத் தான் தின்கிறார்கள். அச்சாதிகளை எல்லாம் இந்துத்துவா சக்திகள் கடிந்து கொள்ளவில்லை.
வன்மையில்லா முறையை உபநிடதக் கொள்கைகள் வலியுறுத்தியமை, புத்தம், சமணம் ஆகியவற்றின் எழுச்சி, வைணவத்தின் மையக்கருத்து ஆகியன தாம் விலங்குகளைக் கொல்லாமையை உறுதிப்படுத்தின. வேளாண்மைச் சமூகத்தில் பசுக்களின் பொருளியல் மதிப்பு அந்நிலையை முதன்மைப்படுத்தியது.

Tags