கன்னிமாடம் அபராஜிதனும் கன்னிப்பையன் அபராஜிதனும் - Book Review

Reviews Aug 8, 2012

கடல்புறாவின் முதற் சில பக்கங்களிலேயே சாண்டில்யனின் நீண்ண்ண்ட வர்ணனைகளைப் பார்த்துப் பயந்து ஓடிவிட்ட நான், 'கன்னிமாட'த்தை படிக்க எடுத்ததற்கும் முழுமையாக வாசித்து முடித்ததற்கும் காரணம் கதையின் நாயகன் பெயரும் அபராஜிதன் என்பதே.. :))

பாண்டிய அரசியலின் இருண்ட காலமாகவும் மகா பராக்கிரமபாகு ஆட்சியில் இலங்கை வரலாற்றின் பொற்காலமாகவும் கருதப்பட்ட காலத்தில் கற்பனைக் கதாபாத்திரமான பாண்டிய சேனாதிபதி 'அபராஜித'னைச் சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது.

தொடர்கதையாக வெளிவந்த காரணத்தினால், ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் ஒன்றரைப் பக்கம் நீளும் உருவகம், உயர்வு நவிற்சி, தற்குறிப்பேற்ற அணிகள் எல்லாம் சேர்ந்த நீண்ட, கதைக்குச் சிறிதும் தேவையற்ற வர்ணனைகளும் (பல இடங்களில் அவற்றை skip செய்துவிட்டேன்) அத்தியாயத்தின் முடிவில் வரும் சஸ்பென்ஸ் உத்திகளும் நவீன மெகா சீரியல்களை நினைவூட்டுகின்றன. :-)

ஒரு சில இடங்களில் ஒரு பக்கம் முழுவதும் ஒரே வாக்கியமாக, முற்றுப்புள்ளி இல்லாமலே எழுதி, படிக்கும் நம்மை ஆசிரியர் சோதிக்கிறார். கதையின் காதல் காட்சிகளும், நம்புவதற்குக் கடினமான போர்த் தந்திரங்களும் அந்தக் காலத்து எம்.ஜி.ஆர் படம் பார்க்கும் உணர்வைத் தருகின்றன.

இருந்தும் ஒரு சில இடங்களில் உண்மையிலேயே விறுவிறுப்பையும் அதிர்ச்சியையும் தரும்வகையில் சாண்டில்யன் கதையை எழுதியிருப்பதால் நான் பயந்த அளவிற்கு கதை சலிப்பூட்டவில்லை...

எனவே சாண்டில்யனின் மாஸ்டர்பீஸ்களாக புகழப்படும் கடல் புறா, யவன ராணியையும் சீக்கிரமே படித்துப் பார்க்க உத்தேசித்திருக்கிறேன்.

First posted on Google+ (8 Aug 2012)

Then on Facebook: web.facebook.com/abarajithan11/posts/10212118027817437

Tags