இனங்களும் இனவாதமும்
This is my essay from 2016 (first year at university) that won second place at the all-level essay competition. I'd like to thank Mr. Baskar, with whom I discussed the key ideas while drafting the essay.
இன்றைய நவீன உலகின் மாபெரும் பிரச்சினைகளுக்கு அடிநாதமாகக் காணப்படுவது இனவாதமே என்றால் அது மிகையாகாது. அறிவியல் நன்கு வளர்ச்சிபெற்று, பெரும்பாலான நோய்களுக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவரும் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலே, ஆதிமனிதனின் ஆழ்மனதில் வேர்விட்டு வளர்ந்து, இன்றுவரை நம்மோடு தொடரும் இனப்பிரிவினைகளுக்கும் அதன் விளைவுகளான இனத்துவேஷம், இனச்சுத்திகரிப்பு, மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கும் முழுமையான தீர்வு கண்டறியப்படாமல் இருப்பது வேதனையளிக்கும் விடயமாகும்.
உயிரியல்ரீதியாக பார்ப்போமெனின், தற்காலத்தில் வெளிவரும் மரபியல் ஆய்வு முடிவுகள் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளன. அதாவது, மனித மரபணுக்களில் இனரீதியான வேறுபாடுகள் எதுவும் கிடையாது எனும் கருத்து அவற்றில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும், இப்பொய்யாமொழியினை உணர்ந்துகொள்ளும் பக்குவமற்ற மனிதர்களிடையே மொழி, மத நம்பிக்கைகள், கலாச்சாரம், பழக்கவழக்கம் போன்றவற்றின் அடிப்படையில் காணப்படும் பிரிவுகளே பொதுவாக ‘இனங்கள்’ எனப்படுகின்றன. இனங்களிடையே புரிந்துணர்வின்மையினால் தலையெடுக்கும் அடிப்படைவாத சிந்தனைகளையும் கசப்புணர்வையுமே ஒருசேர இனவாதம் என அழைக்கிறோம்.
வரலாற்றின் பக்கங்களிலிருந்து....
இனவாதமும் இனப்பிரச்சினையும் இலங்கையர்களான எமக்குப் புதிதல்ல. சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கைத்தாயின் இரு கண்களான சிங்கள, தமிழ் இனங்களுக்கிடையே துளிர்விட்ட இனவாதம் எனும் விஷச்செடி, பெருமரமாக வளர்ந்து முப்பது வருட கொடும்போருக்கு வித்திட்டது. அதன் விளைவாக நாடெங்கும் லட்சக்கணக்கான உயிர்கள் பலிகொடுக்கப்பட்டதும் பல்லாயிரம்கோடி மதிப்புள்ள பொது, தனி சொத்துக்கள் இழக்கப்பட்டதும், நாட்டின் வளர்ச்சி பல தசாப்தங்கள் பிற்போடப்பட்டதும், உலக அரங்கில் நமது நாட்டுக்கு அழிக்கமுடியாத அவப்பெயர் ஏற்பட்டதும் இலங்கையர்களான நாமும், நம் சந்ததிகளும் மறக்கமுடியாத இரத்தச் சரித்திரமாகும்.
அதேவேளை, இனப்பிரச்சினை என்பது, இலங்கைக்கு மட்டுமே உரித்தானதா என்று கேட்டால், இல்லை என்பதே பதில். உலக வரலாற்றின் பக்கங்களை சற்றுப் புரட்டிப் பார்த்தோமேயானால், கிட்டத்தட்ட உலகின் ஒவ்வொரு தேசத்தின் சரித்திரத்திலும் இவ்வாறான கறைபடிந்த பக்கங்கள் நிறைந்துகிடப்பதை அவதானிக்கலாம். ஐரோப்பாவில், இரண்டாம் உலகப்போர்க் காலத்தில், அடோல்ஃப் ஹிட்லரின் ‘நாசி’க்கட்சியால் துல்லியமாகத் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட யூதப்படுகொலையானது கேட்பவர் இரத்தத்தை உறையச் செய்யும் கொடூர சம்பவங்கள் நிறைந்தது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இதேபோல், ருவாண்டா இனப்படுகொலை, தென்னமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் பூர்வகுடிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனஅழிப்புக்கள் என இப்பிரச்சினைக்கான உதாரணங்கள் ஏராளம்.
மேற்குலகை விட்டு, கிழக்கு நாடுகளுக்கு வந்தால், இங்கும் இனவாதத்துக்குப் பஞ்சமில்லை. நமது அண்டைநாடான பாரத பூமியில், நூற்றாண்டுகளாக நிலவிவரும் இந்து-முஸ்லிம் இனப்பிரச்சினையானது, 1993 இல் பம்பாய் கலவரமாகவும், 2002 இல் குஜராத் கலவரமாகவும் வெடித்து ஆயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்டது மட்டுமன்றி, இன்றுவரை நீறுபூத்த நெருப்பாக ஆங்காங்கே நடக்கும் வன்முறைகளூடாக கனன்று வருகின்றது. இவற்றுடன், மியான்மரில் முஸ்லிம்களும் வங்காளதேசத்தில் பௌத்தர்களும் தாக்கப்படுவது இன்றும் தொடர்ந்துவரும் அவலங்களாகும். இந்த இனப்படுகொலைகள்போக ஐக்கிய அமெரிக்காவில் ஆப்பிரிக்கர்களையும் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட ஜாதியினரையும் நூற்றாண்டுகளாக விலங்குகளுக்கும் கீழான அடிமைகளாக நடத்திவந்ததில் இன உணர்வுகளுக்கு இடம் உண்டு என்பதையும் மறுக்க முடியாது.
இத்துடன், தற்காலத்திலேயே மத்திய கிழக்கில் தினந்தோறும் அரங்கேறும் குண்டுவெடிப்புக்களும், படுகொலைகளும், அதைத் தடுக்கிறோம் எனும் போர்வையில் அரபு மேடையில் உலக வல்லரசுகள் ஆடும் பகடையாட்டமும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காவு கொள்கின்றன.
இனவாதத்தின் வேர்கள் எங்கிருக்கின்றன?
இவ்வளவு சிக்கலான, உலகமெங்கும் பரந்துவிரிந்த இனவாதம் ஒரு சமூகத்தில் ஏன் முளைவிடுகிறது? அன்பையும், சகிப்புத்தன்மையையும் போதிக்கும் மதங்களை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளும் மக்கள் ஈவிரக்கமற்ற அரக்கர்கள் போல் நடந்துகொள்வதன் காரணம் என்ன? இந்த அடிப்படைக் கேள்விகளுக்குப் பதில் கண்டோமானால், இனப்பிரச்சினைகளுக்கான ஒரு பொதுத்தீர்வை கண்டுபிடித்தல் ஒருவேளை சாத்தியமாகலாம்.
சமூகவியல் மற்றும் உளவியல் கோட்பாடுகளை எடுத்து நோக்கினோமானால், இனவெறியின் ஆணிவேர் நம் ஒவ்வொருவரிடமும் காணப்படும் “நாம்-அவர்கள் மனப்போக்கு” என்பதை தெரிந்துகொள்ளலாம். இந்தக் கோட்பாட்டின்படி, நாம் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட குழுவோடு நம்மை மனதளவில் அடையாளப்படுத்திக்கொள்ள விழையும் அதே சமயத்தில், பிற குழுக்களில் இருந்து நம்மை நாமே மனதளவில் தள்ளிவைக்கிறோம்.
உதாரணத்துக்கு இருபதாம் நூற்றாண்டின் திட்டமிட்ட யூதப்படுகொலையை சற்று கூர்ந்து கவனிப்போம். கூட்டம் கூட்டமாக, பெண்கள், வயோதிகர் என பாரபட்சம் பார்க்காமல் யூதர்களை கொல்வதற்காக விஷவாயு அறைகளை தயார் செய்த நாசிக்கள், பால்குடிக்கும் குழந்தைகளை கதறக்கதற பிடுங்கியெடுத்து கொலைசெய்த நாசிக்கள், குவியல் குவியலான யூதப்பிணங்களின் கொழுப்பை வெட்டி சவர்க்காரம் தயாரித்து விற்ற நாசிக்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நினைக்கிறீர்கள்? அவர்கள் எல்லாம் ஈவிரக்கமற்றவர்கள், அன்பென்றால் என்னவென்றே தெரியாத அரக்கர்கள், மனநிலை பிறழ்ந்த கொடூர கொலைகாரர்கள் என்று நினைப்பீர்களேயானால் அது தவறு! ஆம், அவர்கள் அனைவருமே என்னையும் உங்களையும் போன்ற சாமானியர்கள்தான்! தினந்தோறும் காலையில் நாய்க்குட்டியைக் கொஞ்சி, காதல் மனைவியை முத்தமிட்டு விடைபெற்று, தேவாலயத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு, வேலைக்குச் சென்று, அங்கே ‘இன்று இத்தனையாயிரம் யூதர்களைக் கொல்லவேண்டும்’ என்று கணக்கிட்டு, அதற்கேற்ப கூட்டம் கூட்டமாக யூதர்களை கொன்றுகுவித்துவிட்டு, இரவு வீட்டுக்கு வந்து மனைவி மக்களை சினிமாவுக்கு அழைத்துச்சென்று குலாவி மகிழ்ந்த சாமானியர்கள் இவர்கள்!
“என்னது! இந்த பாதகர்களுக்கு மனசாட்சியே இல்லையா? துளியும் குற்றவுணர்ச்சி கிடையாதா?” என நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்குப் பதில் இதுதான்: “இவர்களுக்கு மனசாட்சி இருந்திருக்கிறது, ஆனால் குற்றவுணர்ச்சி இல்லை”. சற்று விளக்கமாகச் சொன்னால், ‘நாம்-அவர்கள்’ மனப்பாங்கு கொண்ட இவர்களைப் பொறுத்தவரையில் யூதர்கள் ‘தங்களைச் சேர்ந்தவர்கள்’ இல்லை. ஏன், அவர்கள் மனிதர்களே இல்லை. விலங்குகளைவிடக் கீழான யூதர்களின் வலிகள் இவர்களுக்குப் புரியவில்லை. அதனால், மனதில் குற்றவுணர்ச்சி ஏற்படவில்லை!
கல்வியிலும் செல்வதிலும் தேர்ந்து, அற நூல்கள் ஆயிரம் படைத்தாலும் குற்றவுணர்ச்சி சிறிதும் அற்ற இந்த மனப்பாங்குக்குடன் கைகோர்க்கும், இனவாதத்துக்கான இன்னொரு அடிப்படைக் காரணம்: இனப்பெருமை. “எனது இனம் பெருமைமிக்கது” எனும் சிந்தனை நம் எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால், அச்சிந்தனை “எனது இனம் மட்டுமே பெருமைமிக்கது” என என்று மாற்றமடைகின்றதோ, அன்றே இனவெறிக்கான விதை நம்மனதில் ஊன்றப்படுகின்றது. “நமது ஆரிய இரத்தம் மட்டுமே சுத்தமானது” எனும் ஹிட்லரின் பிரச்சாரமே யூதப்படுகொலையின் ஆரம்பப்புள்ளி என்பதை நினைவுகூரும் நேரத்தில், இன்று இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் “சிங்க-லே” (சிங்க இரத்தம்) பிரச்சாரத்தையும் நாம் எளிதில் ஒதுக்கிவிட முடியாது. அதேபோல் “நமது ஷியா மட்டுமே / சுன்னி மட்டுமே தூய்மையான மதம்” எனும் கொள்கைகளே மத்திய கிழக்கில் இன்று பெரும் போர்களாக வெடித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அத்துடன், தத்தமது சாதிகளை பிற சாதிகளைவிட உயர்ந்ததாக நினைப்பதால் இன்றும் தொடரும் அநீதிகள் எண்ணற்றவை.
ஏன், நமது நாட்டையே எடுத்துக்கொண்டால், வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் வாழும் சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையேயும் சாதிவேறுபாடுகள் இரண்டறக் கலந்திருப்பதனை அவதானிக்க முடிகிறது. எனக்குப் பரிச்சயமான ஊரான யாழ்ப்பாணத்தையே எடுத்துக்கொண்டால், அன்றாடப் பேச்சுவழக்கிலேயே சாதி ஏற்றத்தாழ்வுகள் ஊறிக்கிடப்பதை கவனிக்கலாம். உதாரணமாக, அலுவலகமொன்றில், ஒருவர் செய்த தவறுக்கு மேலதிகாரி திட்டினாலும்கூட, தவறிழைத்தவர் வெளியே வந்து “பறைப் பயலுக்கு திமிரைப் பார்த்தியா? இதுக்குத்தான் இவங்களை வைக்கவேண்டிய இடத்தில வைக்கவேணும் எண்டு சொல்லுறது. இப்ப எல்லாரும் படிச்சு மேல வந்து தலைகால் தெரியாம ஆடுறாங்கள்” என்று பொருமிக்கொள்வது சர்வசாதாரணம். அதுமட்டுமன்றி, சாதாரண, தினப்படி பிரச்சனைகளுக்கும் “அவன்ட கோவியப்புத்தி வேற எப்பிடிப் போகும்?” என்பது போன்ற சாதிவாதம் தோய்ந்த வார்த்தைகள் கூச்சமின்றி பிரயோகிப்படுவதை அவதானிக்கலாம்.
இன்றும், யாழ்ப்பாணத்து நகர்ப்புறத்தில், கற்றறிந்து பட்டம் வாங்கிய மேல்சாதியினரின் வீடுகளுக்கு கீழ்சாதியினர் வேலைசெய்ய வந்தாலும்கூட, அவர்களை வீட்டிற்கு வெளியே, நிலத்தில் உட்கார வைத்து, கோப்பை தராமல் சிரட்டையில் அல்லது இலையில் உணவு வழங்குவதும் அன்றாட நிகழ்வுதான். கிராமங்களில் நடத்தப்படும் நிகழ்வுகளில், வெவ்வேறு சாதியினருக்கு வெவ்வேறாக தேநீர் தயாரிக்கப்பட்டு, அந்ததந்த சாதியினரின் கையாலேயே வழங்கப்படுவதும்கூட இன்றும் நிகழ்ந்து வருகிறது. சில வருடங்களுக்கு முன்புவரை, கிராமப்புறங்களில் மேல்சாதி மக்களுக்கு சொந்தமான கிணறுகளில் மற்றவர்கள் நீர் அள்ளுவதற்கு சமூகத்தில் தடைவிதிக்கப்படிருந்ததும் இலங்கையில் தீண்டாமைக்கு ஓர் உதாரணம்.
இனவாதம் முளைவிடுவதற்கான இன்னொரு காரணம் மக்களின் குறுகிய மனப்பான்மை. குறிப்பாக, இனங்கள் கலந்து வாழாமல், ஒரு இனம் மட்டுமே செறிவாக வாழும் பகுதிகளில் பிற இனங்களுக்கெதிரான இனவாத சிந்தனைகள் எளிதாக வளர்கின்றன. பிற இனங்களுடன் கலந்து பழகும் வாய்ப்பு இல்லாமையால், “இவர்கள் எல்லாருமே இப்படித்தான்” என்ற ரீதியிலான தவறான முன்முடிவுகளும் பொதுமைப்படுத்தல்களும் உருவாகி தன்னிச்சையாகவே தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுகின்றன. இத்தகைய சமூகத்திலிருந்து வெளிவரும் ஒருவர், பிற்காலத்தில் பிற சமூகங்களுடன் பழக ஆரம்பித்தாலும், அவரது ஆழ்மனதில் ஊட்டப்பட்ட முன்முடிவுகளை எளிதில் மாற்றிக்கொள்ள முடிவதில்லை.
பொதுவாக, இனவாதம் எனும்போது, நமது புத்திஜீவிகளும், பத்திரிகை எழுத்தாளர்களும் சிங்களப் பேரினவாதம் பற்றி மட்டுமே பேசுகின்றார்கள். சிறுபான்மை இனங்களுக்கிடையே காணப்படும் பெரும்பான்மை இனத்தை நோக்கிய இனத்துவேஷமும் பெரும்பான்மையினர் பற்றிய தவறான முன்முடிவுகளும் தமிழ் மக்களிடையே வெகுசாதாரணமாக புழங்கிவருவது குறித்து யாரும் பேசுவதில்லை. சிறுபான்மையினரின் இனவாதத்தால் நேரடி விளைவுகள் எதுவும் ஏற்படாது என்பதும், அந்தப் புத்திஜீவிகளே பெரும்பான்மையினர் மீதான துவேஷத்தை தமக்குள்ளே வளர்த்துக்கொண்டிருப்பவர்கள்தான் என்பதும் இம்மௌனத்துக்கு காரணமாக இருக்கலாம். எனினும் போர் நிறைவடைந்த, இலங்கைத்தாயின் ரணங்களுக்கு மருந்திட்டுக்கொண்டிருக்கும் இன்றைய காலக்கட்டத்திலே, பெரும்பான்மையினரின் புத்திஜீவிகள் பலர் சிங்கள மக்களின் பேரினவாத எண்ணங்களைத் தகர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் வேளையிலே, சிறுபான்மையினரின் மனதில் காணப்படும் இவ்விஷத்தை நீக்க யாரும் முயற்சி எடுக்காமலிருப்பது வேதனைக்குரியது. இரு இனங்களுக்கும் சேர்ந்து வாழும் எதிர்காலமொன்றை படைக்க வேண்டுமானால், எல்லா இனங்களுக்குள்ளும் காணப்படும் துவேஷங்களும் வேரோடு களையப்படுதல் அவசியம்.
இதுதவிர, மக்களின் மனதில் இயல்பாக கனன்றுவரும் மேற்படி தணல்களை ஊதி நெருப்பாக்கி, எரியும் தீயில் எண்ணையூற்றி அதை கட்டுக்கடங்காத காட்டுத்தீயாக மாற்றி குளிர்காயும் சில அடிப்படைவாத மதவாதிகளும், அரசியல்வாதிகளுமே இனக்கலவரங்கள் பெரிய அளவில் வெடிப்பதற்கு காரணமாக அமைகின்றனர். நம் நாட்டையே எடுத்துக்கொண்டால், சமீபத்தில் நிகழ்ந்த அளுத்கம இனக்கலவரம் பற்றியும், அது எவ்வாறு ஒரு அடிப்படைவாத குழுவொன்றால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்பதும் ஒட்டுமொத்த இலங்கைக்கும் தெரிந்த விடயம். ஆனால், அக்கலவரத்துக்கும், இன்று பரவலாகக் காணப்படும் முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிரான மனப்போக்குக்கும் ஆதார விதை பல வருடங்களுக்கு முன்பே ஊன்றப்பட்டு வளர்க்கப்பட்டு வந்திருக்கின்றது என்பதை பலரும் அறியார்.
ஆம், மூவினங்களும் சேர்ந்துவாழும் கண்டி மாவட்டத்தில் நான் கல்வி கற்றுக்கொண்டிருந்த வருடங்களில், இனப்பிரச்சினையை வெளிப்படையாக விவாதிக்கும் அளவிற்கு பரந்த மனப்பான்மை கொண்ட நெருங்கிய நண்பர்கள் மூவினங்களிலும் எனக்கு வாய்த்திருந்ததால், இப்பிரச்சினை தொடர்பில் ஓரளவு பரவலான பார்வையை என்னால் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. “சிங்களக் கிராமப்புறங்களில் உள்ள விகாரைகளில் வைத்து வெள்ளந்தியான பொதுமக்கள் ஒருசில அடிப்படைவாத மதவாதிகளால் முஸ்லிம் மக்களுக்கெதிராக மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்” என சிங்கள நண்பனொருவன் வருத்தத்துடன் கூறியபோது நாம் அதிர்ச்சியடைந்தோம். “கண்டியில் எத்தனை முஸ்லிம் கடைகள் பாருங்கள். இப்படியே விட்டால், இலங்கை பாகிஸ்தான் ஆகிவிடும்” என்றெல்லாம் சொல்லப்பட்டதாக கேள்விப்பட்டபோது என் இரத்தம் உறைவதை உணர்ந்தேன். இந்த வார்த்தைகளை வேறு எங்கோ கேட்டது போல் இருக்கிறதா? ஆம், யூதப்படுகொலைக்கு அஸ்திவாரமாக நாசிக்களால் செய்யப்பட்ட பிரச்சாரமும் வார்த்தைக்கு வார்த்தை இதேதானே!
அளுத்கம கலவரத்துக்கு காரணமான அடிப்படைவாதக் கட்சியின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் கூர்ந்து கவனித்தால், ஒரு முக்கிய காரணியை புரிந்துகொள்ளலாம். அவர்கள் வளர்ச்சிபெற்ற காலத்தில், இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்தது. விலைவாசி, ஊழல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்களின் தார்மீக கோபத்தை இவர்கள் திட்டமிட்டு சகோதர இனத்தின்மேல் திசைதிருப்பினார்கள். இருந்தும், அடிப்படைவாதிகளின் பக்கம் சாயாமல் இன ஒற்றுமையை பேண முற்படும் பல பௌத்த மதத்தலைவர்களும் இந்த ஈனச்செயலை வன்மையாக கண்டித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய திசைதிருப்பல் இலங்கையில் மட்டுமல்ல, உலகின் பல இனக்கலவரங்களில் நடந்தேறியிருக்கிறது. மத்திய கிழக்கிலும் ஆப்பிரிக்காவிலும் ஓயாமல் அரங்கேறும் கலவரங்களுக்கு சாமானியர்களுக்கிடையே வறுமையால் ஏற்படும் ஓய்வின்மையும் அதன் திட்டமிட்ட திசைதிருப்பலும் ஒரு மறைமுகக் காரணம் என்பதை மறுக்கமுடியாது.
தீர்வுதான் என்ன?
மேற்குறிப்பிட்ட காரணிகளைப் பார்த்தால், இனவாதம் என்பது எவ்வளவு ஆழமானது, சிக்கலானது என்பது புரிகிறது. இதற்கு தீர்வாக சில பெரும்பான்மை அடிப்படைவாதிகள் “எல்லாத் தமிழர்களையும் இந்தியாவுக்கும், முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கும் துரத்தவேண்டும்” எனக் கூவுவதும், பதிலுக்கு சிறுபான்மை அடிப்படைவாதிகள் “பெரும்பான்மையினரோடு வாழ முடியாது, எமக்குத் தனிநாடுதான் வேண்டும்” என அறிக்கை விடுவதும் இப்பிரச்சினையை இவர்கள் எந்தளவுக்கு புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்காமல், சிறிது ஆராய்ந்தால் இனப்பிரச்சினைக்கு சில தீர்வுகள் தென்படுகின்றன.
இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்க்கமான தீர்வு, நம் சங்க இலக்கியமான புறநானுற்றிலேயே காணப்படுகிறது. இற்றைக்கு இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கணியன் பூங்குன்றனார் மொழிந்த “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” எனும் வாழ்க்கை முறையே அதுவாகும். அதன்படியே, இனங்கள் தனித்தனியே செறிந்து வாழாமல், கலந்து வாழ வழிசெய்ய வேண்டும். இதன்மூலம், பிற இனங்களைப் பற்றிய தவறான முன்முடிவுகளும், பொதுமைப்படுத்தல்களும் பொதுப்புத்தியில் புகுத்தப்படுவதை தவிர்க்கலாம். ‘அவர்களும் நம்மைப்போன்ற மனிதர்கள்தான். அவர்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள்’ எனும் புரிதலை இதன்மூலம் மக்களிடையே ஏற்படுத்தலாம். சகோதர மொழிகளை தாய்மொழிபோல சரளமாக பேசும் வல்லமை பிற இனங்களோடு கலந்து வாழ்வதற்கு தோள்கொடுக்கின்றது. நாம் ஒன்றுக்குள் ஒன்றாக, அண்ணன் தம்பியாக பழக ஆரம்பித்துவிட்டோமானால், அங்கே இனவாதத்துக்கு ஏது இடம்?
இனவாதத்தைவிட நுண்ணிய சிக்கலான சாதி ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக்கொண்டால், இந்தியாவின் சாதிப்பிரச்சனைகளான சேரிகள், தீண்டாமை, அடிமைத்தனம், சாதிக் கலவரங்கள் அளவுக்கு இலங்கையில் இப்பிரச்சனை மோசமாக இல்லை என்றாலும், உலகில் கல்வியறிவு வீதம் அதிகூடிய நாடுகளில் ஒன்று என்ற அடிப்படையில் நோக்கினால், இலங்கையில் காணப்படும் சாதி ஏற்றத்தாழ்வுகள் ஒரு முக்கிய சமூகப்பிரச்சனையாக அடையாளம் காணப்படுவதும், அதற்கான தீர்வுகள் முன்னெடுக்கப்படுவதும் அவசியம்.
இவற்றோடு, அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்படும், மொழித்தூய்மை, இரத்தத்தூய்மை ஆகியவற்றை முன்வைத்து மக்கள் கூட்டத்தின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் பிரச்சாரங்கள், தரவுகள் சார்ந்த ஆதாரங்களின் துணைகொண்டு பொதுவெளியில் முறியடிக்கப்படவேண்டும். இதன்மூலமாகவே பொதுப்புத்தியில் புகுத்தப்படும் பிரிவினைவாத தீப்பொறிகள் இனக்கலவரமாக பற்றியெரிவதற்கு முன்னர் அவற்றை அணைக்கமுடியும்.
முடிவாக, இனவாதம் எனும் உலகளாவிய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால் தனிமனித மட்டத்திலும் சமூக மட்டத்திலும் ஒருசேர மாற்றங்கள் நிகழவேண்டும் என்பது புலனாகிறது. நாம் ஒவ்வொருவரும் பரந்த மனப்பான்மையுடன், வீணான இனப்பெருமைகளை தூக்கியெறிந்துவிட்டு பிறஇன மக்களோடு கலந்து வாழ முற்பட்டால் வேற்றுமையிலே ஒற்றுமை காணும் மனப்பாங்கைக் கைக்கொள்ளலாம். அதேவளை, நாட்டின் வளங்கள் யாவும் அனைத்து இனங்களுக்கும் சமனாகப் பகிரப்படுவதும், சில குழுக்களால் திட்டமிட்டுப் பரப்படும் இனவாதக் கருத்துக்கள் முளையிலேயே கிள்ளி எறியப்படுவதும் அவசியம். மனங்கள் மட்டுமல்ல, வளங்களும் வேலிகள் தாண்டி பயணப்படும்போதுதான் இனவாதம் முறியும் என்பது திண்ணம். இப்படியாக, இனவேறுபாடுகள் களையப்பட்ட உலகொன்றில்தான் சுபிட்சமும் சமாதானமும் வேரூன்றுவது சாத்தியம். எனவே, வலுமிக்க இளைஞர்களாக, கற்றறிந்த பல்கலைக்கழக மாணவர்களாக, நாளைய தலைவர்களாக அத்தகைய உலகொன்றுக்கான அடித்தளத்தை இன்றே இட ஆரம்பிப்போமாக.
First posted on Facebook: facebook.com/abarajithan11/posts/10207402519012664